குமரியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - ஒருவர் கைது
குமரியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன அய்யர்க்கு, கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளி அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் சென்ற போது, அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர் சூழால் பகுதியை சேர்ந்த அபிஜித் (25) என்பது தெரியவந்தது, தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த இடத்தை சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தார். மேலும் அவர் மீது கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணியம்மாள் வழக்கு பதிவு செய்தார்.