குமரி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

Update: 2022-02-12 15:15 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு மாருதி காரை தடுத்து நிறுத்திய போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது காரினுள் இருந்த மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர், இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் காரினுள் இருந்து வெளியே இறக்கிவிட்டு காரில் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது காரின் பின்பக்க சீட்டின் அடியில் சிறு சிறு பாக்கெட்டுகளில் 10 கிலோ மதிப்புடைய கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

போலீசாரிடம் கஞ்சா சிக்கியதை கண்டதும் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர், இதனால் சுதாகரித்து கொண்ட போலீசார் மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்து மார்த்தாண்டம் காவல்நிலையம் கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் கேரளா மாநிலம் வெள்ளநாட்டை சேர்ந்த ஃபெரோஸ் 42, ஹரிசுதன் 41, அனூப் 35 என்பது தெரியவந்தது.

இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News