கன்னியாக்குமரி அருகே கிரேன் மோதி முதியவர் பலி
கன்னியாக்குமரி அருகே கிரேன் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.;
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர நாதன்(76), இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணம் முடித்து சென்னையில் தங்கி உள்ள நிலையில் சுரேந்திர நாதன் அவரது மனைவியுடன் மாங்கரையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் வீட்டிற்கு பால் வாங்குவதற்காக சுரேந்திர நாதன் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கருங்கலில் இருந்து தொலையாவட்டம் நோக்கி வந்த பழுதூக்கும் கிரேன் வாகனம் ஒன்று எதிர்பாரத விதமாக சுரேந்திர நாதன் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுரேந்திர நாதன் வாகனத்தின் சக்கரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீசார் அவரது உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கிரேன் டிரைவரான திக்கணம்கோடு பகுதியை சேர்ந்த ஜாண்சன் என்பவரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.