குமரியில் சேதமடைந்துள்ள கடலோர சாலைகளை சரி செய்ய அமைச்சரிடம் கோரிக்கை.
குமரியில் சேதமடைந்துள்ள கடலோர சாலைகளை சரி செய்ய அமைச்சர் வேலுவிடம் எம்.பி, எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தனர்;
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி - இரையுமன்துறை சாலை, வள்ளவிளை - எடப்பாடு - இரவிபுத்தன்துறை பகுதிகளில் உள்ள சாலை உள்ளிட்ட சாலைகள் கடலரிப்பால் முற்றிலுமாக சேதமடைந்து அந்த சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு கடந்த 20 ஆண்டுகளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று தேங்காப்பட்டணம் -அரையன்தோப்பு - முள்ளூர்துறை சாலையும் கடலரிப்பால் முற்றிலுமாக சேதமடைத்து கடந்த 15 - ஆண்டுகளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவும், மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவும், மீன்பிடி தொழிலாளர்கள் தேங்காப்பட்டணம் துறைமுகத்திற்கு செல்லவும் நீண்ட தொலை தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவை சந்தித்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் சாலை சீரமைப்பு குறித்து கோரிக்கை வைத்தனர்.
மேலும் பொது மக்களின் நலன்கருதி மேற்கூறிய இரண்டு சாலைகளையும் சீரமைக்க கடலரிப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைத்து சாலைகளை சீரமைக்க வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.