வெள்ளத்தால் இணைப்பு சாலை சேதம்: அதிகாரிகளின் அலட்சியத்தால் பாெதுமக்கள் அவதி

குமரியில் கனமழையால் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-12-15 14:45 GMT

வெள்ளத்தால் சேதமடைந்த குழித்துறையில் இருந்து கழுவன்திட்டை, களியக்காவிளை செல்லும் இணைப்பு சாலை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக ஆறு கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இதில் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான குழித்துறையில் இருந்து கழுவன்திட்டை, களியக்காவிளை செல்லும் முக்கிய இணைப்பு சாலையும் வெள்ளபெருக்கில் உடைந்தது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த சாலை வழியாக செல்ல முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வயதான முதியவர்கள் உடைந்து கிடக்கும் சாலை வழியாக நடந்து செல்லும் போது பள்ளத்திற்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்குவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. அதேபோல் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வீடுகளில் வாகனங்கள் இருந்தும் வாகனங்களில் எடுத்து செல்ல முடியாமல் தோளில் சுமந்து செல்லும் அவலமும் காணப்பட்டு வருவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக உடைந்து கிடக்கும் இந்த சாலையை பார்வையிடவோ சீரமைக்கவோ அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர். தொடர்ந்து இந்த சாலை சீரமைக்கப்படாமல் இருந்தால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் ஆகையால் துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக உடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News