சேட்டிலைட் போனை அரசிடம் திரும்ப ஒப்படைப்போம் - குமரி மீனவர்கள்
அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால் சேட்டிலைட் போனை அரசிடம் திரும்ப ஒப்படைக்க போவதாக குமரி மீனவர்கள் தெரிவித்தனர்.
குமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 750 க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 15 முதல் 20 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடித்து வருவது வழக்கம்.
இவ்வாறு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இயற்கை பேரிடர் குறித்த தகவல்களை தெரிவிக்க மீன்வளத்துறை சார்பில் சேட்டிலைட் போன் வழங்கப்பட்டது. இந்த போன்களை விசைப்படகு மீனவர்கள் வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில் முதலில் அந்த போனுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் 1451 ரூபாய் மாத தவணையாக வசூலித்து வந்தது.
இந்நிலையில் தற்போது அந்த தொகையை மூன்று மடங்காக உயர்த்தி 3451 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் பி.எஸ்.என்.எல் அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா, டவ்தே, யாஷ் புயல் மற்றும் மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதிக தொகை வசூலிப்பதற்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடலுக்கு செல்லும் போதுதான் சேட்டிலைட் போன்கள் பயன்படும் தற்போது 3 மாதங்களாக கடலுக்கு செல்லலாத நிலையிலும் பயன்படுத்தாத போனுக்கு அரசு வாடகை கேட்பது தங்களுக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.