தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு: கொல்லங்கோடு நகராட்சியில் திருப்பம்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்த நகரசபை தலைவரால் கொல்லங்கோடு நகராட்சியில் திருப்பம் ஏற்பட்டது.
தமிழகத்தில் திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்த இரண்டு நகராட்சிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 க்கு 10 என்ற சம இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.
இந்த நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிட கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி கட்சியினர் முதலில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இறுதி கட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட அக்கட்சியை சேர்ந்த ராணி என்பவர் நகராட்சி அலுவலரிடம் தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.இதனை பார்த்த கூட்டணி கட்சிகள் திமுக தலைமை ஆதரவு அளிப்பது போல் நாடகமாடுவதாகவும் கூட்டணி கட்சி என்று சொல்லிகொள்வது அவமானகரமானது என கூறியது, மேலும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தல் முடிவின் போது கட்சி தலைமைக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராணி காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் 18 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை தோல்வியடைய செய்து வெற்றிபெற்றார்.இந்நிலையில் தலைமை அறிவுறுதலை மீறி செயல்பட்டு தலைவர்களாக பொறுப்பு ஏற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை அறிவித்தது. இதனிடையே தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கொல்லங்கோடு நகரசபை தலைவர் மறுப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.