டவ்தே புயலின் தாக்கம் - குமரியில் 4200 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
கன்னியாகுமரியில் டவ்தே புயல் காரணமாக 4200 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.;
தென் மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது, அதன் படி ஏற்பட்ட டவ் தே புயலின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்கள் வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.
இதனிடையே அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு, ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய தோட்டங்களுக்குள் மழை நீர் புகுந்தது, அதன் படி நீர் புகுந்ததில் சுமார் 4000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்ட வாழை மரங்கள், நெல் கதிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
இதே போன்று சுமார் 200 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு உள்ள ரப்பர் மரங்களையும் மழை நீர் சூழ்ந்துள்ளது, 3 நாட்கள் பெய்த கனமழையால் மாவட்டத்தில் இரண்டு வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து 2 உயிர்கள் பலியாகி உள்ளன, மேலும் 19 வீடுகள் பகுதி அளவு சேதம் அடைந்துள்ளது, 13 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 6 மின் கம்பங்கள் சாய்ந்தன.
இதனிடையே குமரிமாவட்டத்தில் பெரு வெள்ளம் மற்றும் சூறை காற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.