குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்
குமரியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வந்தது. சுமார் முப்பத்தி ஆறு மணி நேரம் பெய்த இந்த கனமழை காரணமாக குமரியின் மேற்கு மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து 11000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோதையாறு, திற்பரப்பு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.
இதனையடுத்து தண்ணீர் ஓடுபாதையில் அமைந்துள்ள குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் காட்டாற்று வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. ஏற்கனவே திருநந்திக்கரை, களியல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. மேலும், முன்சிறை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.