குமரி மாவட்டத்தில் விளையும் கிராம்பிற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் தரத்தில் சிறந்த கிராம்பிற்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

Update: 2021-10-09 14:15 GMT

நறுமணப் பயிரான கிராம்பு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திரகிரி பகுதிகளில் 750 ஹெக்டேர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டு உள்ளது.

இது தமிழகத்தில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதமாகும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் மிதமான வெப்பநிலை காரணமாக, கிராம்பில் உள்ள வாசனை திரவியங்கள் குறைந்த அளவிலேயே ஆவியாகி, அடர்த்தியான வாசனை எண்ணெய் கிடைக்கிறது.

இங்குள்ள கிராம்பு மரத்தின் மொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கிராம்பின் மொத்த உற்பத்தி 1,100 மெட்ரிக் டன், இதில் 1,000 மெட்ரிக் டன் தமிழகத்தில் உற்பத்தியாகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 750 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடியாகும் கிராம்பில், யூஜினால் அசிடேட் என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதால், வாசனை எண்ணெய் அதிகம் கிடைக்கிறது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்பு தரத்தில் முதலிடத்தில் உள்ள நிலையில் அதற்கு `கன்னியாகுமரி கிராம்பு` என புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்று உள்ளது.

Tags:    

Similar News