மீன் பதப்படுத்தும் ஆலைக்கு ஆதரவும் எதிர்ப்பும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் மீன் பதப்படுத்தும் ஆலைக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒன்று சேர்ந்ததால் 8 கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை பகுதியில் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலை கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து கடந்த சில தினங்களாக தூர்நாற்றம் வீசுவதாகவும் அதனால் ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் மீன் பதப்படுத்தும் ஆலையால் எந்த பாதிப்பும் இதுவரை இல்லை எனவும் ஆலையை மூடினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் கூறி ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக தூத்தூர் பங்கு மண்டல அலுவலகத்தில் நீரோடி முதல் இரையுமன்துறை வரை உள்ள 8 கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஒரு சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பெயரால் மீனவ மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஒருசிலர் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் ஆலையை மூடக்கூடாது எனவும் தங்கள் வாழ்வாதாரமாக உள்ள ஆலையை மூடினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் 8 மீனவ கிராம மக்கள் ஆலைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினர்.