இடிந்து விழும் நிலையில் சுகாதார பிரிவு கட்டிடம்: உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குமரியில் இடிந்து விழும் நிலையில் உள்ள சுகாதார பிரிவு கட்டிடத்தை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.;
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி வளாகத்தில் சுகாதார பிரிவு அலுவலகம் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புற மக்களுக்கு, தாய், சேய் நல சேவைகளை வழங்குதல் மற்றும் தொற்று நோய்களின் அபாயங்களிலிருந்து மக்களைப் பாதுகாத்து சுகாதார பணிகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்கள் மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ் கேட்டு ஏராளமான பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்க்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த கட்டிடத்தின் பின் பகுதி சுவர் விரிசல் ஏற்பட்டதோடு, கட்டிடத்தின் மேல் பகுதியும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. தினசரி பொதுமக்கள், மற்றும் களப்பணியாளர்கள் வந்து செல்லுவதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் சுகாதார பிரிவு அலுவலகத்தை நகராட்சி வளாகத்தின் வேறு அலுவலகத்தில் மாற்றுவதோடு இடிந்து விழும் நிலையில் உள்ள அலுவலகத்தை இடித்து அப்புறபடுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.