குமரியில் பல நூறு ஆண்டுகள் பழமையான புனித கேதறின் ஆலய அர்ச்சிப்பு விழா
குமரியில் பல நூறு ஆண்டு பழமையான புனித கேதறின் ஆலய அர்ச்சிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் இருந்த பல நூறு ஆண்டு பழமையான புனித கேதறின் ஆலயம் இடிக்கப்பட்டு அந்த பகுதியில் கலைநயத்துடன் கூடிய புதிய கோவில் கட்டப்பட்டு அதற்கான அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.
திருவனந்தபுரம் உயர் மறை மாவட்ட பேராயர் சூசை பாக்கியம், கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜீயூஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆகியோர் தலைமையில் நடந்தது. அர்ச்சிப்பு விழாவில் கலந்து கொள்ளுவதற்க்காக இரவிபுத்தன்துறை பகுதிக்கு வந்த ஆயர்களுக்கு ஊர் எல்லையில் பொன்னாடைகள் போர்த்தி மரியாதை செலுத்திய ஊர் பொதுமக்கள் மேள தாளங்களுடன் அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் வாசல் சாவியை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசைபாக்கியத்திடம் வழங்கினர், அதனை ஏற்றுக்கொண்ட பேராயர் சமாதான புறாக்களை வானில் பறக்கவிட்டு ஆலயத்தின் முன்பக்க வாசலில் கட்டபட்டிருந்த ரிப்பனை வெட்டி ஆலயத்தின் வாசலை திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே சென்ற பேராயர், மற்றும் ஆயர்கள் ஆலயத்தை சுற்றிலும் சுத்தநீர் தெளித்து அசுத்தங்களை நீக்கினர் தொடர்ந்து பேராயர் சூசைபாக்கியத்தின் தலைமையில் முதல் திருப்பலி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்த பீடம் மற்றும் சொரூபங்களில் அர்ச்சிப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சி அளித்தது.