முப்படை தளபதி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: 2 வழக்கறிஞர்கள் மீது வழக்கு
குமரியில் முப்படை தளபதி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட இரு வழக்கறிஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்தார்.
இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை இருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகியும் வழக்கறிஞருமான சிவராஜ பூபதி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ரெட் ஸ்டார் கட்சியின் மாவட்ட செலாளரும் வழக்கறிஞருமான சி.எம். பால்ராஜ் ஆகிய இருவர் மீது கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153(A), 504, 505(2) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இருவரும் சமூக வலத்தளங்களில், "பாஸிஸ்ட்களின் கைக்கூலி சர்வாதிகாரி பிபின் ராவத்துக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்" என குறிப்பிட்டு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் இந்த வழக்கு பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.