குமரி அரசு அலுவலகங்களில் தொடரும் லஞ்சம்: அடுத்தடுத்து வீடியோ வெளியாவதால் பரபரப்பு
குமரி அரசு அலுவலகங்களில் தொடரும் லஞ்சம் குறித்து அடுத்தடுத்து வீடியோ வெளியாவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகமான ஏழுதேசம் சி கிராம நிர்வாக அலுவலகம் சின்னத்துறை பகுதியில் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தில் கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் கட்டுமான நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்காக கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்து பெற சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த அலுவலக உதவியாளர் பெண் ஒருவர் 200 ருபாய் லஞ்சம் கேட்டுள்ளார், அதற்கு ஒத்துக்கொண்ட கூலித்தொழிலாளி அவரது மனைவியிடம் 200 ருபாயை கொடுத்து அனுப்பிவிட்டு அவரை பின்தொடர்ந்து சென்று அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது அந்த பெண் அலுவலர் பணத்தை வாங்கி மேஜையினுள் போட்டுவிட்டு சான்றிதழை சரிபார்த்து அனுப்பி உள்ளார். அப்போது கூலித்தொழிலாளி எதற்கு இந்த பணம் வாங்குகிறீர்கள் உங்களுக்கு சம்பளம் கிடைக்காதா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த பெண் அலுவலர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், கட்டுமான நலவாரிய சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் நிலையில் ஒவ்வொருவரிடமும் இருந்து இதுபோன்று லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளால் ஏழை பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.