குமரியில் தொடர் கனமழை: 7 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு
குமரியில் தொடரும் கனமழையால் 7 கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.;
குமரியில் தொடர் மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாகவும் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அதன்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 நான்கு அடியையும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 73 அடியையும் எட்டி உள்ளது, மேலும் அணைகளில் இருந்து வினாடிக்கு 3100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளை நிலங்களுக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து வெளியேறிய மழை நீர் நாகர்கோவிலிலிருந்து கீரிப்பாறை, அருமநல்லூர், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட 7 கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையை ஆக்கிரமித்து உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
அரசு பேருந்துகள் அனைத்தும் திட்டுவிளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு திரும்பி செல்வதால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்ததால் தென்னை வாழை உள்ளிட்ட விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனிடையே மழை வெள்ளம் புகுந்த இந்த பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளத்தோடு குட்டி தீவுகள் போன்று காட்சி அளித்து வருகின்றன.