30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் பரிதவித்த மீனவர்கள் -சார் ஆட்சியர் பட்டா வழங்கினார்
குமரியில் 30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் பரிதவித்த மீனவர்களுக்கு சார் ஆட்சியர் பட்டா வழங்கினார்.;
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் உள்ள சுமார் 136 குடும்பங்களுக்கு கடந்த 1992 ம் ஆண்டு தமிழக அரசு சிங்காரவேலன் நினைவு குடியிருப்பு என்ற பெயரில் இலவச குடியிருப்புகள் கட்டி கொடுத்திருந்தது.
ஆனால் இந்த குடியிருப்பில் வசித்து வந்த மக்களுக்கு பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்ததையடுத்து அந்த பகுதி மக்கள் பட்டா வழங்கிட கேட்டு தாலுகா அலுவலகத்தில் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அரசு நேரடியாக குடியிருப்பு வீடுகள் வழங்கிய பயனாளிகளின் வாரிசுதாரர்களான 45 குடும்பங்களுக்கு கடந்த ஆண்டு பட்டா வழங்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இடத்தை விலைக்கு வாங்கி குடியிருந்து வந்த 89 குடும்பங்களுக்கு பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் உதவியுடன் பட்டா பெறுவதற்கான முயற்சியில் இறங்கினர். இந்நிலையில் இன்று மார்த்தாண்டன்துறை பங்கு தந்தை அலுவலகத்தில் வைத்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை தலைமையில் கிள்ளியூர் தாசில்தார் திருவாளி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் 89 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.