குமரியில் கடன் தொல்லையால் 70 வயது தாயுடன் தொழிலாளி தற்கொலை
குமரியில் தீராத கடன் தொல்லை காரணமாக 70 வயது தாயுடன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (48). இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவருடன் அவரது தாய் சாந்தகுமாரி ( வயது 70), மனைவி மஞ்சுளா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் வசித்து வந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நகைகள் வைக்கும் பிளாஸ்டிக் பெட்டிகள் தயார் செய்யும் சிறிய தொழிற்சாலையை தொடங்கினார்.
நகை கடைகளுக்கு இதனைக் கொடுத்துவந்த நிலையில், தொழிலில் முதலீடு செய்யவும் குடும்ப செலவிற்காகவும் வெளி நபர்களிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் நலிவடைந்த நிலையில் வாங்கிய கடன் தொகைகளை திருப்பி செலுத்த முடியாமல் அவதிபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு மனைவி மஞ்சுளா மற்றும் மகள் நேற்று மாலை சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் சுரேஷ் குமார் மறைத்து வைத்திருந்த சயனைடை தாய் சாந்தகுமாரிக்கும் சாப்பிட கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய மனைவி மஞ்சுளா, கணவன் மற்றும் மாமியார் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நேசமணி நகர் போலீசார், இருவரது உடலையும் கைபற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.