பெண்களின் சபரிமலை மண்டைக்காடு கோவிலில் நாளை கொடியேற்றம்
பெண்களின் சபரிமலை மண்டைக்காடு கோவிலில் மாசி கொடைவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பழமையும் பிரசித்தியும் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் இருமுடி கட்டி வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் மாசி கொடை விழாவும், கொடை விழாவில் இடம் பெறும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் மற்றும் ஒடுக்கு பூஜை பிரசித்தி பெற்றது.
இதனிடையே மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த வருடத்திற்கான 10 நாள் மாசி கொடை விழா நாளை ( 26ம் தேதி ) தொடங்குகிறது.
இந்த திருவிழா காலங்களில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.