முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.;
குமரி முக்கூடலில் நடைபெற்ற மகா சமுத்திர ஆரத்தி
கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பாக மார்கழி பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சமுத்திர அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தீப ஆரத்தி என ஏராளமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
மேலும், சுமங்கலி பெண்கள் அகல் தீபங்களை ஏந்தி வந்து நெய் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அப்போது, உமா மகேஸ்வர சிவாச்சாரியார் சங்கல்ப பூஜை செய்யும் நிகழ்ச்சியும், சமுத்திர அபிஷேகமும், அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்களும், அர்ச்சகர்களும் கையில் 5 அடுக்கு தீபம் ஏந்தி கிழக்கு திசையில் கடலை நோக்கி நின்று ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மின்னொளியில் ஜொலிக்க நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டின்போது ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.
முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தியை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞானபிரமாச்சாரி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் மற்றும் சிவன் அடியார்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.