சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடைகளின் கட்டமைப்பு மாற்றம்; வியாபாரிகள் காேரிக்கை
குமரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கடைகளின் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என உருட்டுவண்டி வியாபாரிகள் கோரிக்கை.;
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்து அங்கு அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் சிலை, திருவள்ளுவர் சிலை மற்றும் இயற்கை காட்சிகளில் அழகை ரசித்து செல்வார்கள்.
கோடை விடுமுறை நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் காலங்களில் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல ஆயிர கணக்கில் இருக்கும். அதன் படி சுற்றுலா வரும் பயணிகளை நம்பி குமரியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட உருட்டு வண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கார் பார்க்கிங் அருகே 200 கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அதற்கு ரூபாய் 40 ஆயிரம் அட்வான்ஸ் வருடத்திற்கு இருபத்தி எட்டு ரூபாய் வாடகையும் நிர்ணயித்து வசூல் செய்து வந்தனர். கொரானா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் வியாபாரிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாடகையை பேரூராட்சி நிர்வாகம் உயர்த்தியது.
இதனை தொடர்ந்து பயணிகளை ஈர்க்கும் வகையில் கடைகளின் கட்டமைப்பை மாற்றி அமைத்து தர வேண்டும், போதிய வசதிகள் இன்றி பாழ் அடைந்து சுகாதாரமின்றி காணப்படும் கடைகளை சீர் செய்ய வேண்டும். வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலையில் வாடகையை உயர்த்தி மேலும் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட உருட்டு வண்டி வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.