போக்குவரத்து காவலர்களுக்கு மோர், குளிர்பானம் வழங்கினார் எஸ்.பி.
குமரியில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கினார்.;
போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் வழங்கினார் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது, இதனிடையே கோடைக்காலம் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த வெயில் சூழலில் போக்குவரத்து காவலர்கள் அயராது பணிசெய்து வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தை போக்கி சோர்வில்லாமல் பணிசெய்ய தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
டி.ஜி.பி. உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்களுக்கு மோர், குளிர்பானம் மற்றும் தர்பூசணி வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர் இன்று போல் நாள்தோறும் மே மாதம் முடியும் வரை மோர் மற்றும் குளிர்பானம் போன்றவை மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க தனியே காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.