ஈரான் சிறையில் கைதியாக தவிக்கும் குமரி மீனவர்கள் - மீட்க கோரிக்கை
ஈரான் சிறையில் கைதியாக தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இனையம், ராமன்துறை, சின்னத்துறை,தூத்தூர் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் மற்றும் கேரள மாநிலம் பொழியூர், பூவார், விழிஞ்ஞம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 22 ம் தேதி ஈரான் நாட்டில் இருந்து ஹசன் என்பவருக்கு சொந்தமான யாக்கோபு மற்றும் அசின் என்ற விசைப்படகில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
அவர்கள் கத்தார் நாட்டு எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த கத்தார் நாட்டு கடலோர காவல்படையினர் இரண்டு படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
தொடர்ந்து கத்தார் நாட்டு நீதிமன்றத்தில் மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளுக்கு அந்த நாட்டு ருபாய் மதிப்பில் 50000 ருபாய் அபராதம் விதித்து உள்ளனர். இந்த ருபாய் இந்திய மதிப்பில் ஒரு படகுக்கு 10 லட்சம் வரும்.
இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் ஜஸ்டின் லூர் தாசன் ஓட்டி சென்ற அசின் என்ற படகையும் அதில் இருந்த தமிழகம் மற்றும் கேரளத்தை சேர்ந்த 9 மீனவர்கள் மற்றும் ஈரான் நாட்டு மீனவர்கள் 2 பேரையும் சேர்த்து 11 பேரை விடுதலை செய்துள்ளனர்.
ஆனால் அந்த படகின் கேப்டனான தூத்தூர் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் லூர் தாசனை மட்டும் விடுவிக்காமல் அபராதத்தொகை முழுவதையும் அவரே செலுத்தவேண்டும் என்று கூறி சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.
இதனால் ஜஸ்டினின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகி வாழ்வாதராத்தை இழந்து வருமானத்திற்கு வழி இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த படகின் உரிமையாளர் ஹசன் அபராதத்தொகையை செலுத்த முன்வராமல் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களையும் திரும்ப ஊருக்கு அனுப்ப வேண்டிய முயற்சிகள் எடுக்காமல் கைவிரித்து உள்ளார்.
இந்நிலையில் சிறையில் இருந்து விடுவிக்கபட்டிருக்கும் 4 கேரள மீனவர்களையும் இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கையை கேரள அரசு எடுத்து வருவதாகவும் விமான பயணத்துக்கு தேவையான பணத்தை மீனவர்களுக்கு வங்கி மூலம் அனுப்பி கொடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போல் தமிழக அரசும் விடுதலை செய்யபட்டிருக்கும மீனவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டும் என்றும் சிறையில் வாடும் 15 இந்திய மீனவர்களையும் வெளியுறவுத்துறை மூலம் மத்திய மாநில அரசுகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.