குமரியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: காவல்நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை
குமரியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதி குடியிருப்புகள் நிறைந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது.
இந்த பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று அந்த நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்றை அமைக்க இன்று காலை வந்துள்ளது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் எந்தவித கருத்து கேட்காமலும், தகவல் தெரிவிக்காமலும் திடீரென வந்து டவர் அமைக்கும் வேலையை துவங்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் அந்த பகுதியில் ஒன்றுகூடி டவர் அமைக்கும் வேலையாட்களை முற்றுகையிட்டு பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு கூடிய ஊர்மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து நித்திரவிளை காவல்நிலையத்தில் குவிந்து செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்க கூடாது மீறி அமைக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து நித்திரவிளை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி செல்போன் டவர் அமைக்க வந்தவர்களையும் ஊர்மக்களையும் காவல்நிலையத்தில் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் சட்டப்படி தீர்வு காண்பதாக கூறிய ஊர் மக்கள் அதற்காக ஒரு வாரம் ஆகும் என்பதால் அதுவரை கோபுரம் அமைக்கும் பணியை செய்ய கூடாது என கோரிக்கை விடுத்தார். இதனை எதிர் தரப்பினர் ஏற்றதால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் நிலவி வந்த பரபரப்பு நீங்கியது.