குமரியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
குமரியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் அரசு மதுபானக்கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ள நிலையில் இப்பகுதி எப்போதும் நெரிசலான பகுதியாகவே காணப்படும்.
இந்நிலையில் இந்த பகுதியில் மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மாணவர்கள், இளைஞர்கள் மது பழக்கத்திற்கு உட்பட வாய்ப்புள்ளதாக கூறியும், டாஸ்மாக் நிர்வாகம் அப்பகுதியில் மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித பாதுகாப்பு கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.