மண்டைக்காடு கோவில் கொடை விழா - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மண்டைக்காடு கோவில் கொடை விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மற்றும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
ஆண்டுதோறும் மாசி மாதம் இந்த கோவிலில் நடைபெறும் கொடை விழா பிரசித்தி பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது.
அதன்படி இந்த வருத்திற்கான மாசி கொடை விழா கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த கொடை விழாவில் தினமும் கேரள ஆகமவிதிப்படி பல்வேறு பூஜைகள் மற்றும் வாகன வீதி உலா போன்றவை நடைபெற்றன.
இந்த நாட்களில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பொங்கல் வைத்து அம்மனுக்கு நிவேதனம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் கொடை விழாவில் சிறப்பு பெற்ற பூஜைகள் ஆன யானை மீது சந்தன குடம் பவனி மற்றும் பெரிய சக்கர தீவட்டி பூஜை போன்றன நேற்று நடைபெற்றன.
இந்நிலையில் இன்று பத்தாம் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதற்காக அதிகாலை முதலே கோவிலில் குவிந்த தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் கொடை விழாவை முன்னிட்டு குமரி நெல்லை தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 1200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது.