கேரள மாணவியை கடத்தல்: குமரியில் பதுங்கியிருந்த இளைஞர் கைது: போலீசார் அதிரடி
கேரள மாணவியை கடத்தி கொண்டு வந்து குமரியில் பதுங்கி இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;
கேரள மாநிலம் கோவளம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ( 24 ), இவர் கடந்த மாதம் 12 ஆம் தேதி அதே பகுதியில் வசித்து வந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கடத்தி கொண்டு நித்திரவிளை பகுதிக்கு வந்துள்ளார்.
பின்னர் நித்திரவிளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த மகள் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி திருவல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். அப்போது மாயமான மாணவி கடத்தப்பட்டு நித்திரவிளை அருகே உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து நித்திரவிளைக்கு வந்த கேரள போலீசார், நித்திரவிளை போலீசாரின் உதவியுடன் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த வீட்டுக்குள் அதிரடியாக சென்று சோதனை செய்தனர்.
அப்போது பிரகாசும் கடத்தப்பட்ட மாணவியும் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை நித்திரவிளை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கேரளா போலீசாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். இதனிடையே மாணவியை மீட்ட கேரள போலீசார் அவரை கடத்தியதற்காக பிரகாசை கைது செய்து அழைத்து சென்றனர்.