குமரியில் நகை அடகு கடையில் மோசடி: போலீசார் விசாரணை
குமரியில் நகை அடகு கடையில் மோசடி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை கோட்டக்காலா பகுதியை சேர்ந்தவர் ஆன்றனி விசுவாச பிரேம் என்ற ஆல்வின்.
கட்டிட தொழிலாளியான இவர் பொன்மனை ஆலுமூட்டுவீடு பகுதியை சேர்ந்த கேசவகுமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் 9 கிராம் நகை மற்றும் 57 கிராம் நகையை கடந்த 2018 ஆம் ஆண்டில் இருதடவையாக அடகு வைத்துள்ளார்.
இந்நிலையில் 9 கிராம் நகைக்கு பணம் செலுத்தி மூன்று வருடமாகியும் நகையை திருப்பி கொடுக்காமல் நகை அடகு கடை உரிமையாளர் கேசவகுமார் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் வருத்தமடைந்த ஆல்வின் தனது குடும்பத்துடன் நகை அடகு கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர் இது குறித்து நகை அடகு பிடிப்போர் நிறுவன உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆல்வினிடம் பணம் செலுத்தியதற்கான அனைத்து ஆவணங்களும் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.