சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பறிமுதல், மூன்று பேர் கைது
குமரியில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான மெத்தா பெட்டமின் , லைசெஜிக் ஆசிட் டைதைலாமைடு ( LST) மற்றும் எம்.டி' எம்.ஏ, ஆகிய போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக சிலர் வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்த போதைப் பொருட்களை வாங்குவது போல் நடித்து அந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முகமது அஸ்லாம் ( வயது 22), முகமது ஷாபி (வயது 32 ) நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த சாஹீன் கான் ( வயது 20) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த போதைப்பொருட்கள் திருவனந்தபுரத்திலிருந்து விற்பனைக்காக நாகர்கோவில் கொண்டுவரப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது, யார் யார் இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.