வீட்டில் சட்டவிரோதமாக சாரயம் பதுக்கல்: பாேலீசார் அதிரடி ரெய்டு; வழக்கறிஞர் தப்பியாேட்டம்
வழக்கறிஞர் வீட்டில் சாரய ஊறல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதிரடி காட்டிய போலீசாரால் வழக்கறிஞர் தலைமறைவானார்.;
கருங்கல் அருகே வீட்டிற்குள் சட்ட விராேதமாக குடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் அருள் ஸ்டீபன்சன், இவர் நாகர்கோவிலில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
இவரது குடும்ப வீடான தேவிகோட்டில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக சாரயம் காய்ச்ச படுவதாக குளச்சல் டிஎஸ்பி தங்கராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் டிஎஸ்பி தங்கராமன் கருங்கல் காவல்நிலைய போலீசாரை அந்த வீட்டில் சென்று திடீர் ஆய்வு நடத்த உத்தரவிட்டார், அதன்பேரில் கருங்கல் போலீசார் இரவு நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வீட்டின் உள்ளே 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரல் முழுவதும் சாரய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வீட்டின் உள்பகுதியில் உள்ள மற்ற அறைகளில் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு குடத்திலும் ஊறல் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது. இதனையடுத்து டிஎஸ்பிக்கு கிடைத்த தகவல் உண்மை என உறுதி செய்யப்பட்டது.
மேலும் அந்த பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் சாராய ஊறல் முழுவதும் கீழே ஊற்றி அழிக்கப்பட்டது.
இந்நிலையில் சாரய ஊறல் பதுக்கி வைத்திருந்த வீட்டில் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் இல்லாமல் வயதான பெண்மணி ஒருவர் மட்டும் இருந்துள்ளார். அவரது வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதனால் போலீசார் யாரையும் கைது செய்யாமல் வீட்டின் உரிமையாளரான வழக்கறிஞர் அருள் ஸ்டீபனசன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வழக்கறிஞரை தேடி வருகின்றனர்.