குமரியில் சட்டவிரோத மது விற்பனை: 642 மது பாட்டில்கள் பறிமுதல்
குமரியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை கைது செய்த போலீசார் 642 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டவிரித்தமாக மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கு புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ராஜாக்கமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, எஸ்.பி தனிபிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை செய்தபோது பாரில் சட்டவிரோதமாக சுஜின் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சோதனை செய்த போலீசார், 642 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் 9 ஃபுல் பாட்டில் மற்றும் 15 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட சுஜினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.