மனைவியை கொலை செய்ய முயற்சி : கணவருக்கு 7 ஆண்டு சிறையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்
மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்.;
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் அமலசுதா (48), இவருடைய கணவர் செல்வராஜ் (55) வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கும் அவரது மனைவியான அமலசுதாவுக்கும் இடையில் குடும்ப பிரச்சனை இருந்து வந்தது.
கடந்த 26.12.2012 அன்று ஏற்பட்ட தகராறில் செல்வராஜ் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியால் கொலை செய்யும் நோக்கத்துடன் தலை, கன்னம் மற்றும் கை பகுதிகளில் வெட்டினார்.இதனை தொடர்ந்து அமலசுதா கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் 19.01.2016 அன்று நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் குற்றவாளி செல்வராஜ்க்கு 7 வருட சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து செல்வராஜ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கினை விசாரித்தஉயர் நீதிமன்றம் இன்று 26.03.2022 செல்வராஜுக்கு மகிளா நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்தது. தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து செல்வராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.