"மீன் வித்திட்டா வர்றே இறங்கு": அடாவடி அரசு பஸ் ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்
குமரியில் அரசு பேருந்தில் இருந்து மீனவ பெண் இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் ஓட்டுநர், நடத்துனர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், வயது முதிர்ந்த மூதாட்டியான இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலை தலைசுமடு ஆக மீன்களை சுமந்து குளச்சல் பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள மீன்களை மாலையில் குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு இரவு மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்புவது வழக்கம்.
வழக்கம் போல் செல்வம் நேற்று மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். செல்வத்தை கண்ட பேருந்து நடத்துனர் அவர் மீது துர்நாற்றம் வீசுவதால் பேருந்தில் பயணிக்க முடியாது என கூறி பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி செல்வம் பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று, இது என்ன ஞாயம் பேருந்தில் ஏறிய பொம்பளையை எப்படி இறக்கி விடலாம் பெட்டிசன் கொடுப்பேன் என கூறி கத்தி கூச்சலிட்டதோடு தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொதுமக்களிடம் கொட்டி தீர்த்தார்.
இறங்கி விட்ட நடத்துனரோ என்ன நடத்தது என்று ஒன்றும் அறியாதவர் போல் நேரக்கட்டுப்பாட்டு அலுவலகம் முன் நின்று கொள்ள அந்த மூதாட்டியோ "மீன் வித்திட்டா வர்றே நாறும் இறங்கு இறங்கு" என்று நடத்துனர் கூறியதாக தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்ததோடு வாணியக்குடி வரை நான் நடக்க வேண்டுமா என கண்கலங்கிய படியே பேருந்து நிலைய சுற்று சுவரில் சாய்ந்தபடியே நின்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் இது பேருந்தில் நடக்கும் நவீன தீண்டாமையா என கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர்கள் அந்த பேருந்து நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த விவகாரம் முதலமைச்சர் கவனம் வரை சென்றதோடு இச்சம்பவத்திற்கு முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்தார், இந்நிலையில் மூதாட்டி இறக்கி விடப்பட்ட தடம் எண் 5D/12F பேருந்து ஓட்டுநர் மைக்கேல் நடத்துனர் மணிகண்டன் மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத சமய குறிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை போக்குவரத்து துறை பொது மேலாளர் அரவிந்த் சஸ்பென்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.