வீட்டில் மறைத்து வைத்திருந்த மண்ணுளி பாம்பு பறிமுதல் செய்த வனத்துறையினர்
குமரியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நான்கரை கிலோ மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்;
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிநாதபுரம் குண்டல் பகுதியில் வீட்டில் வியாபார நோக்கத்தோடு சட்டத்திற்குப் புறம்பாக மண்ணுளி பாம்பினை வைத்திருப்பதாக குமரி மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் இளையராஜா உத்தரவின்பேரில் வனப்பாதுகாவலர் சிவக்குமார் தலைமையில் தனிக்குழு குண்டல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சதுரங்க வேட்டை படம் பாணியில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் பூட்டியிருந்த வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் உள்புற அறையில் சுமார் நான்கரை கிலோ எடை மற்றும் 141 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அரியவகை மண்ணுளி பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அந்த பாம்பை வனத்துறையினர் கைப்பற்றினர், இதனிடையே பாம்பை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து இருந்த அரவிந்த் என்பவர் தலைமறைவான நிலையில் அவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.