உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை தேவை : தேங்காய்பட்டிணம் மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
மீன்பிடித்துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்தல், மணல் மேடை சரி செய்தல் என எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் தொடர் விபத்துகளால் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
தூண்டில் வளைவு அமைத்தல், மணல் மேடு சீரமைத்தல் என எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்யாததால் தான் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் கடற்கரை மீனவ கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் முயன்றனர்.
ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தேங்காய்பட்டிணம் துறைமுகம் இரையுமன்துறை பகுதியில் இருந்து முகத்துவாரப்பகுதி வரை மீனவர்கள் கைகளில் கறுப்பு கொடி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தினர்.