மண்டைக்காடு பகவதி அம்மன் கருவறை மண்டபத்தில் தீ விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கருவறை மண்டபத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது

Update: 2021-06-02 04:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில்  வெளியேறும்  புகை.

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மற்றும் கேரளாவை பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

குறிப்பாக கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து இந்த கோவிலில் தரிசனம் செய்வார்கள், தற்போது கோரோணா விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெற்று கொண்டு இருந்த போதே கோவில் கருவறை பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது சற்று நேரத்தில் காற்றின் வேகம் காரணமாக தீ பரவிய நிலையில் கோவில் கருவறை மண்டபம் மற்றும் மேற்கூரை பகுதிகளிலும் தீ வேகமாக பரவியது.

இதனை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர் மேலும் தகவல் கிடைத்தது விரைந்து வந்த குளச்சல் மற்றும் தக்கலை பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக பெரும் போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே தீவிபத்தில் கோவில் கருவறை மண்டபம் மற்றும் கோவில் மேற்கூரை மற்றும் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன, தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியாத நிலையில் கோவில் கருவறை மண்டபத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இதனிடையே பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News