பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்தவர் கைது
பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்தவரை குமரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.;
பெங்களூரில் தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த அனில்குமார் (39). இவர் அதே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பின்பு அந்தப் பெண் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும், ஆசிட் அடித்து கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் வழக்கு பதிவு செய்தார். மேலும் வழக்கை விசாரித்த காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி அனில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.