குமரியில் காணாமல் போன மீனவர்கள்-கண்டுபிடித்து தரகோரி உறவினர்கள் கோரிக்கை
குமரி மற்றும் மேற்கு வங்கம் மீனவர்கள் மொத்தம் 16 மீனவர்களை கண்டுப்பிடித்து தர மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம், கொட்டில்பாடு, குளச்சல், கடியப்பட்டணம்,கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் பெய்ப்பூர் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
பொதுவாக ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 10 நாட்கள் வரை மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம் 15 நாட்கள் ஆகியும் மீனவர்கள் ஊர் திரும்பாததால் கடந்த வாரம் ஏற்பட்ட தவ் தே புயலில் சிக்கி விசைபடகு சேதம் ஏற்பட்டு மீனவர்கள் ஆபத்தில் இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் காணமால் போன மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
அப்போது குமரி மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 16 மீனவர்கள் குறித்த தகவல் இல்லாததால் அவர்களை கண்டுப்பிடித்து தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். மீனவர்கள் குடும்பத்தினருடன் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் பாதர் மற்றும் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.