பிச்சை எடுத்த பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

குமரியில் பிச்சை எடுத்த பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-08-13 15:00 GMT

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பிச்சை எடுத்து நிதி வழங்கியவர்.

நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (68), மனைவியை இழந்த இவர் தனது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பொதுமக்களிடம் யாசகம் பெற்று வந்தார்.

அதன்படி யாசகம் பெற்ற பணத்தில் தனது செலவிற்கு போக மீதம் வரும் பணத்தை ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட், பேனா, பென்சில் போன்றவற்றை வாங்கி கொடுத்தும் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி கல்விக்கு உதவி செய்து வந்தார்.

கால்நடையாகவே சென்று யாசகம் செய்யும் பூல்பாண்டி ஒவ்வொரு வாரமும் மீதம் இருக்கும் பணத்தை தான் செல்லும் வழியில் இருக்கும் அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் கல்விக்காக கொடுத்து வந்துள்ளார்.

இது வரை 400 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு உதவி செய்து இருப்பதாக கூறும் பூல்பாண்டி தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மீதம் வரும் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக கொடுத்து வருகிறார்.

அதன் படி நான்கு முறை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அளித்த முதியவர் பூல்பாண்டி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் மூலமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார்.

தள்ளாத வயதில் கால் நடையாக சென்று பொதுமக்களிடம் யாசகம் பெற்ற பணத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்த முதியவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

Tags:    

Similar News