சட்டசபையை முடக்குவோம் என்று கூறுவது தேர்தல் தோல்விபயம்: ஜி.ராமகிருஷ்ணன்
தோல்வி பயத்தால் சட்டசபையை முடக்குவோம் என எடப்பாடி பழனிச்சாமி உளருவதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் குமரி மாவட்டம் வந்தார்.
முன்னதாக கொல்லங்கோடு நகராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுடன் கலந்துரையாடினார்.அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பல்லாயிரகணக்கான பொறுப்புகளுக்கு தேர்தல் நடப்பதால் சில இடங்களில் கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை.
தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது, குமரி மாவட்டத்தில் சில சூழ்நிலைகளால் கூட்டணி உடன்பாடு எட்டப்படாததால் தனித்து போட்டியிடுகிறோம். இந்த தேர்தலில் தமிழகம் மட்டுமில்லாமல் குமரி மாவட்டத்திலும் பாஜக நிச்சயமாக வெற்றிபெறபோவதில்லை.
மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்பட்ட அதிமுக அரசின் செயல்பாட்டையும் மக்களை பிளவு படுத்தும் சக்தியாக செயல்படும் பாஜகவிற்கும் மக்கள் நிச்சயமாக தோல்வியை தருவார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறது ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சிகளுக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலுக்கு பிறகு குரல் கொடுக்கும்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தொண்டர்களை தக்க வைத்து கொள்ள தோல்வி பயத்தில் சட்டசபையை முடக்குவோம் என்பது போன்று பேசி உளறி வருகிறார். அதை கணக்கில் கொள்ளவேண்டாம் எனவும், அதிமுக பாஜக கூட்டணியின் போதே தோல்விதான் ஏற்பட்டது, இந்த தேர்தலில் அவர்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள் எனவும் கூறினார்.