சாதனைக்கு வயது வரம்பு இல்லை: 73 வயதில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதியவர்
சாதனைக்கு வயது வரம்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் குமரியில் 73 வயதில் முதியவர் டாக்டரேட் பட்டம் பெற்றார்.;
சாதனை என்பதற்கு வயது வரம்பு இல்லை, அதேபோன்று கல்விக்கும் வயது வரம்பு இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள புதூரை சேர்ந்த 73 வயது நிரம்பிய முதியவர் தங்கப்பன்.
குழித்துறையில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் வீட்டில் முடங்கி நோய்வாய்ப்பட்டு கிடக்காமல் மீண்டும் மாணவராக வலம் வந்திருக்கிறார்.
இன்றைய பயங்கரவாத உலகிற்கு காந்திய சிந்தனைகளின் தேவைகள் குறித்த ஆய்வு கட்டுரையை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூலம் தொடங்கியிருக்கிறார். எட்டு ஆண்டுகள் தொடர் முயற்சியின் காரணமாக இவருக்கு கடந்த 15 ஆம் தேதி பிஎச்டி பட்டம் கொடுத்து உற்சாகப்படுத்தியதால் இதுவரை வெறும் தங்கப்பனாக இருந்த முதியவர் தற்போது டாக்டர் தங்கப்பனாக உருவாகி உள்ளார்.
இவர் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து, ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் மாணவனாக வலம் வந்து, தற்போது டாக்டர். தங்கப்பனாக வலம் வருவது இந்த அவர் வாழும் கிராமத்திற்கும், மாவட்டத்திற்கு மட்டும் அல்லாது தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.