600 ஆண்டு பழைமை வாய்ந்த கோவில், வழிபட முடியாததால் விநாயகரிடம் முறையிட்ட பக்தர்கள்

600 ஆண்டு பழைமை வாய்ந்த கோவிலில் வழிபட முடியாததால் விரக்தி அடைந்த பக்தர்கள் பாடல் பாடி விநாயகரிடம் முறையிட்டனர்.;

Update: 2021-06-29 12:30 GMT

குளச்சலில் உள்ள 600  ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயிலை பராமரித்து சுத்தம் செய்து பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் அமைந்துள்ளது தேசு விநாயகர் கோவில், சுமார் 600 வருடங்களுக்கு மேல் பழமை கொண்ட பிரசித்தி பெற்ற இந்த கோவிலை கட்டிய குளச்சல் ஊரை சேர்ந்த செட்டு சமுதாயத்தினர் தொடர்ந்து அதனை பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு கோவிலை தன்வசம் எடுத்து கொண்ட இந்து அறநிலைய துறைக்கு எதிராக ஊர் மக்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் மீண்டும் கோவில் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே மீண்டும் கோவிலை தன்வசப்படுத்தி கொண்ட இந்து அறநிலைய துறை கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அறங்காவளர்களை நியமிக்காமலும் கோவிளுக்கு பூஜாரியை நியமிக்காமல், பூஜைகள் மற்றும் பராமரிப்பை செய்யாமல் அறநிலைய துறை அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோவில் முழுவதும் செடிகள் படர்ந்தும் கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் இடிந்தும் கோவில் தெப்ப குளம் மரங்கள் வளர்ந்து காடுகள் போல் காட்சியளிக்கிறது.

ஒரு காலத்தில் 4 கால பூஜைகள் மற்றும் பசியால் வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி வந்த கோவில் இன்று புதர்கள் சூழ்ந்து பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விச ஜந்துக்கள் வசிக்கும் கூடாரமாக மாறியதாலும் பூஜைகள் நடைபெறாமல் இருப்பதால் புதர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

அந்த கோவிலை கட்டிய சமுதாய மக்கள் ஒன்றிணைந்து கோவிலை சுத்தப்படுத்தி நித்திய பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்து பராமரிப்பு பணி, நித்திய பூஜை, மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றை செய்தாலும் அதனை செய்ய விடாமல் இந்து அறநிலைய துறை முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்து அறநிலைய துறை கோவிலை பராமரிக்காமல் கோவில் சொத்துக்கள் மூலமாக வரும் வருமானத்தை மட்டுமே குறி வைப்பதாகவும், பூஜைக்கு தேவையான சூடம் பத்தி கூட வாங்கி கொடுக்காத நிலையில் அறநிலைய துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஊர் மக்கள் ஒன்று கூடி விநாயகரிடம் பஜனை பாடல்கள் பாடி முறையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பல நூற்றாண்டு காலமாக தங்கள் மூதாதையர்கள் முதற்கொண்டு பரம்பரை பரம்பரையாக நாங்கள் வணங்கி வந்த கோவில் இன்று பாழ் அடைந்து இருக்கும் நிலையில் திருப்பணிகளை செய் அல்லது செய்ய விடு என்ற முழக்கத்தை கையில் எடுத்து போராட்டத்தை மேற்கொள்வதாகவும் உடனடி தீர்வு கிடைக்க வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News