செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.. 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்…
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.;
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து குளிர்ந்த காற்றுடன் வீசுவது மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காலை முதல் மாமல்லபுரம் கடல் சீற்றம் அதிகரித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மாமல்லபுரத்தில் காற்று வேகம் அதிகரித்து வருவதால் மின்சாரம் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் வருவாய்த்துறை மூலம் இணைக்கப்பட்ட குழுக்கள் மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 12 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 13 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 28 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 25 மில்லி மீட்டர் மழை பதிவு பதிவாகியுள்ளது.
மேலும், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செம்பரம்பாக்கத்தில் மட்டும் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செம்பரம்பாக்கம் சுற்று பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும், தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின்பேரில், இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக அடையார் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. முதல் கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டில் தற்போது மூன்றாவது முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தின் உயரம் 20.37 அடியும், மொத்த கொள்ளளவு 2695 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 709 கன அடியாகவும் உள்ளது.
மேலும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கினால் உபரி நீர் வெளியேற்றமும் படிப்படியாக உயர்த்தப்படும் என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதும், தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து இயங்கினாலும் பொதுமக்கள் அதிகம் பயணிக்காததால் பேருந்துகள் காலியாகவே செல்கின்றன.