அந்தியூரில் பதற்றமான வாக்குச் சாவடிகளை மண்டல டிஐஜி ஆய்வு
அந்தியூரில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்ட பள்ளிகளில் மண்டல டிஐஜி முத்துச்சாமி ஆய்வு நடத்தினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர். அந்தியூர் பேரூராட்சியில் தவிட்டுப்பாளையம் தொடக்கப்பள்ளி, கிழக்குப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜீவா செட் செல்லும் வழியில் உள்ள அரசுப்பள்ளி உள்ளிட்ட ஆறு பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள, 22 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்ட இடங்களில், இன்று, கோவை மண்டல டிஐஜி முத்துச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதில், தவிட்டுப்பாளையம் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மண்டல டிஐஜி முத்துசாமி, இப்பகுதியில் கூடுதல் போலீசாரை குவிக்க வேண்டும் எனவும், வாக்குப்பதிவின் போது, சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கவும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியில் வாக்குசாவடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது, பவானி டிஎஸ்பி., கார்த்திகேயன், அந்தியூர் எஸ்ஐ., கார்த்தி உள்ளிட்ட காவலத்துறை அதிகாரிகள், பள்ளி தலைமையாசியர் பாலு சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.