கீழ்வாணி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அந்தியூர் அடுத்த கீழ்வாணி அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் நாகராஜ் (வயது 34). இருசக்கர வாகனத்தில் பாத்திரம் விற்பனை செய்யும் தொழிலாளி. இவரது தந்தை கணேசன், தாயார் மற்றும் உடன் பிறந்த தம்பி ஆகியோர் இறந்த நிலையில், நாகராஜ் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு சொந்த வேலை காரணமாக ஆப்பக்கூடல் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கீழ்வாணி-நஞ்சுண்டாபுரத்திற்கு இடையே சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் நாகராஜின் உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ஆப்பக்கூடல் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.