கோபி அருகே சத்துணவில் புழு? : அதிகாரிகள் நேரில் விசாரணை

கோபி அருகே கள்ளிப்பட்டியில் அரசு பள்ளி சத்துணவில் புழு இருந்ததாக மாணவர்கள், பெற்றோர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Update: 2024-06-29 03:45 GMT

சத்துணவில் புழு இருந்ததான புகாரையடுத்து அதிகாரிகள் விசாரணை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (27ம் தேதி) மதியம் பள்ளியில் 20 மாணவ, மாணவிகள் பருப்பு குழம்பு சாதம் சாப்பிட்டு உள்ளனர். மாணவ, மாணவிகள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது உணவில் புழுக்கள் இருந்ததாக கூறி சில மாணவர்கள் ஆசிரியரிடம் புகார் அளித்து உள்ளனர். பின்னர் அந்த உணவை குப்பை தொட்டியில் கொட்டினர்.

அதன் பின்னர், மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ, மாணவிகள் சிலர் பெற்றோரிடமும் இது குறித்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டனர்.

அதற்கு, அவர்கள் பருப்பு குழம்பில் முருங்கை கீரை போட்டு சமையல் செய்து இருந்ததால் அதில் ஏதேனும் புழுக்கள் இருந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, கோபி வட்டாட்சியர் கார்த்திக், ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர், டி.என்.பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி இந்திரா தேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் கூறும்போது, மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்த மாணவர்களில் 2 பேரின் உணவில் புழுக்கள் இருந்துள்ளது உண்மைதான், தவறு நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காத வகையில் சத்துணவு சுகாதாரமான முறையில் வழங்க பார்த்து கொள்வோம் என்றார்.

Tags:    

Similar News