பைனான்ஸ் பணம் கேட்டு கொடுத்த நெருக்கடியால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
சென்னிமலை அருகே கூலித்தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை அடுத்த மேலபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஜீதா. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மணிகண்டன் அரச்சலூரில் உள்ள முத்தூட் பைனான்ஸில் குடும்ப செலவிற்காக ரூ. 70 ஆயிரத்தை கடனாக வாங்கியுள்ளார். இதனால் கடந்த 3 மாதங்களாக சரியாக வேலையில்லாததால் மணிகண்டன் முத்தூட் பைனான்ஸில் வாங்கிய பணத்தை கட்ட கட்ட முடியாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 8 மணியளவில் முத்தூட் பைனான்ஸில் இருந்து இரண்டு பேர் வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டுள்ளனர். மணிகண்டன் தனக்கு மூன்று மாதங்களாக வேலை இல்லாததால் பணத்தை கட்ட முடியவில்லை. இதனால், இரண்டு மாதம் தவணை கேட்டுள்ளார். அதற்கு முத்தூட் பைனான்ஸ் ஊழியர்கள் பணத்தை இப்போதே கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.இதனையடுத்து, மணிகண்டன் தனது அரை பவுன் நகையினை பெருந்துறையில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸில் அடமானம் வைத்து இருப்பதாகவும், அதனை மீண்டும் அடமானம் வைத்து பணத்தை தருவதாக கூறினார்.
பிறகு மணிகண்டனின் மனைவி அஜீதா பெருந்துறை முத்தூட் மினி பைனான்சுக்கு சென்றபோது, அரச்சலூர் முத்தூட் மினி பைனான்ஸ் ஊழியர்களும் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர், பெருந்துறை முத்தூட் மினி பைனான்ஸில் அடமானம் வைத்த நகை காலாவதி ஆகி விட்டது என கூறியுள்ளனர். இதனால் அஜீதா முத்தூட் பைனான்ஸ் ஊழியர்களிடம் பணத்தை நாளை தருவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, அஜீதா மணிகண்டனை தொடர்பு கொண்டு பணத்தை கொடுக்க வேறு வழியில்லை என கூறினார். பின்னர், அஜீதா கிளம்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பு சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அஜீதா தனது மகனை அழைத்து கேட்டபோது , மணிகண்டன் வீட்டினுள் சென்று கதவை முடிக்கொண்டதாக கூறியுள்ளான். பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது மணிகண்டன் கூரையிலுள்ள ஆங்கிளில் நைலான் சேலையில் தூக்குபோட்டு கொண்டார்.
பின்னர், மணிகண்டனை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனைக்காக மணிகண்டனின் பிரேதமானது அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மணிகண்டனின் மனைவி அஜீதா சென்னிமலை போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப செலவிற்காக முத்தூட் பைனான்ஸில் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் கூலித்தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.