அறச்சலூர் நவரசம் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
அறச்சலூரில் உள்ள நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நவரசம் மகளிர் கல்லூரி மற்றும் ஈரோடு மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ் நிறுவனம் இணைந்து உலக மகளிர் தின விழாவை நவரசம் கல்லூரியில் கொண்டாடியது. இந்த விழாவுக்கு கல்லூரியின் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் பழனிசாமி தொடக்கவுரை ஆற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறந்த மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கினார். பின்னர், அவர் மாணவிகளிடம் பேசியதாவது,
மாணவிகள் பொறுமையாக இருக்க வேண்டும். வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். லட்சியம் நோக்கி நடக்க வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். கல்லூரியில் பேராசிரியர்கள் சொல்வது மனதில் இருக்க வேண்டும் இப்படி வாழ்ந்தால் அனைவருமே சிகரங்களை தொடும் சிங்கப் பெண்களாக மாற முடியும் என்றார்.
கௌரவ விருந்தினராக ஈரோடு சுதா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் தனபாக்கியம் கந்தசாமி கலந்து கொண்டு பேசுகையில், நான் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டேன். மாமியார் கொடுத்த உற்சாகத்தில் படித்து மருத்துவர் ஆனேன். இன்றைக்கு ஈரோட்டின் சுதா மருத்துவமனையின் தலைமை நிர்வாகியாக உயர்ந்திருக்கிறேன். படித்தால் உயர்ந்த இடத்தை பிடிக்க முடியும். படித்துக் கொண்டே இருந்தால் வாழ்வில் வெற்றிகளை எட்டிப் பிடித்துக் கொண்டே இருக்க முடியும். அனைத்து வெற்றிகளுக்கும் கல்வியே முதற்படி. இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை விருந்தினராக வடுகபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் அம்பிகாபதி விஸ்வநாதன் கலந்து கொண்டு இன்றைக்கு பெண்கள் தினம் உலகம் முழுவதும் பெண்களை கொண்டாடுகின்ற திருநாள் பெண்களை எல்லாம் மேடையில் ஏற்றி வைத்து சமுதாயத்தில் உயர்த்தி வைத்து அழகு பார்க்கின்ற அத்தனை ஆண்களுக்கும் நன்றி என்றார். இதனைத் தொடர்ந்து ஈரோடு தி ஐ ஃபவுண்டேஷன் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை கண் மருத்துவ ஆலோசகர் டாக்டர். சக்தி ராஜலட்சுமி தன் குழுவினரோடு சிறப்பாக நடத்தினார். மருத்துவ முகாமில் கலந்து கொண்டு 1500 மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பயனடைந்தனர்.
இவ்விழாவில், மலபார் கோல்டு & டயமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரனீஸ், விஸ்வநாதன், நவரசம் மெட்ரிக் பள்ளி தலைவர் பழனிசாமி, தி நவரசம் அகாடமி பள்ளியின் தலைவர் கதிர்வேல், செயலாளர் கார்த்தி, தாளாளர் அருண் கார்த்திக், பொருளாளர் பொன்னுவேல், கல்லூரியின் துணைப் பொருளாளர் கைலாசம், கல்லூரிக் கமிட்டி உறுப்பினர்கள் மதியரசு, அமிர்தநாதன், கார்த்திகேயன், சிவசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நடைபெற்ற விழாவில் கல்லூரியின் முதல்வர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார். விழா நிறைவில் மாணவிகளின் பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரதியார் பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த சாதனைப் பெண்மணிகளான நவரசத்தின் மாணவ கண்மணிகளுக்கு 42 கேடயங்கள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில், ஈரோடு மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.