கோபிசெட்டிபாளையம் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் கள்ளிக்காட்டு வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் நாகராஜ். இவர் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் கோவையை சேர்ந்த ரங்கராஜ் மகள் ரேணுகா தேவி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு பிரகதி என்ற 7 வயது மகளும் பிரதன்யா என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நாகராஜின் தங்கை கவிதா என்பவரின் மகள் காவியா விடுமுறைக்கு நாகராஜ் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது காவியா, பிரகதி ஆகியோருக்கு புது துணி வாங்கி உள்ளனர்.இதில் இருவரின் துணி சிறிது பெரியதாக இருக்கவே, அதை டெய்லர் கடைக்கு கொண்டு சென்று சரி செய்ய நாகராஜின் தந்தை கோவிந்தசாமி கூறி உள்ளார். இது தொடர்பாக கோவிந்தசாமிக்கும், ரேணுகாதேவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ரேணுகா தேவி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீப்பற்ற வைத்துக் கொண்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது ரேணுகா தேவி எரிந்த நிலையில் இருந்தார்.உடனே தீயை அணைத்து சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகாதேவி இன்று உயிரிழந்தார்.இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.