வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மூடல் - வனத்துறை அறிவிப்பு
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.;
ஈரோடு அருகே வெள்ளோட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சரணாலயம், பறவைகளின் வாழ்விடமாக காணப்படுகிறது. சீசனின்போது இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்து செல்வதுண்டு. இதனால் இயற்கை எழில் மிகு அமைப்புடன் சரணாலயம் திகழ்கிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், ஆங்காங்கே உள்ள மரங்களின் கிளைகளில் ஏராளமான பறவைகள் தங்கியுள்ளன. அந்த பறவைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டமாக பறந்து செல்வதை பார்க்க ரம்மியமாக காட்சி தருகிறது. அதேபோல் தண்ணீரில் மீன்களை பிடித்து சாப்பிடும் காட்சியையும் நேரில் கண்டு ரசிக்க முடிகிறது.பெரிய நீர் காகம், சிறிய நீர் காகம், பாம்பு தாரா, ஆமைக்கோழி, நீளவால் இலைக்கோழி, கொசுஉள்ளான், நாரை, சாம்பல் நாரை, அழகுபுள்ளி மூக்கு வாத்து போன்ற பறவைகள் காணப்படுகிறது. வண்ணநாரை, குருட்டு கொக்கு, சாம்பல் நாரை, ஆள்காட்டி பறவை ஆகியன சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன.
இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கையாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சரணாலயம் முன்பு அறிவிப்பு பலகையும், வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.